இஸ்லாம் மதத்திற்கு மாறும் BC, MBC, SC பிரிவினருக்கு சாதிசான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து: தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு!

இஸ்லாம் மதத்திற்கு மாறும் BC, MBC, SC பிரிவினருக்கு சாதிசான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் இஸ்லாம் மதத்திற்கு மாறும்போது, அவர்களை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களாக கருதி சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணை ரத்து செய்பட்டட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சம்சீர் அகமது. இந்துப் பெற்றோருக்குப் பிறந்த இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தை தழுவினார். இந்நிலையில் இவர் தனக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில் முஸ்லிம் லெப்பை என சாதிச் சான்றிதழ் வழங்குமாறு விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு தனக்கு ‘முஸ்லிம் லெப்பை’ பிரிவில் சாதிச் சான்றிதழ வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளித்திருந்தார்.

இதனிடையே கடந்த 2024-ஆம் ஆண்டு பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர்(BC), மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர்(MBC), சீர்​மரபினர்(DNC) அல்​லது பட்​டியல் சாதி(SC) பிரிவு​களைச் சேர்ந்​தவர்​கள் முஸ்லிம் மதத்​தைச் சேர்ந்த 7 பிரிவு​களில் ஏதேனும் ஒன்​றுக்கு மாறும்​போது அவர்​களுக்கு ‘பிற்படுத்​தப்​பட்ட வகுப்பு முஸ்​லிம்​கள்’ என சான்​றிதழ் வழங்​கலாம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையின்படி தனக்கு சாதிச் சான்றிதழ் வழங்கும்படி சம்சீர் அகமது உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பாலாஜி அமர்வு, “ஒருவர் இஸ்லாமிற்கு மாறினால் அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே, பிறப்பின் அடிப்படையில் அமையும் குறிப்பிட்ட பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோர முடியாது என்று தீர்ப்பளித்து தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.