முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

இரட்டை இலை சின்னம் முடங்கினாலும் ஜெயலலிதா பாணியில் பலத்தை நிரூபிப்பாரா இபிஎஸ்?


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

ஓரே கூட்டணிக்குள் யாருடன் கூட்டணி என்கிற கேள்வி எழுப்பப்படும் விநோதமான சூழலை ஈரோடு கிழக்கு தொகுதி சந்தித்துள்ளது. அதிமுக உட்கட்சி பிரச்சனை முக்கிய பேசு பொருளாகியுள்ள இந்த இடைத் தேர்தலில் இபிஎஸ் எடுக்கப் போகும் வியூகம் என்ன?

கடந்த சட்டப்பேரவை தேர்தலில்  அந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமாகா, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய பிறகு அதிமுக இம்முறை போட்டியிட தாங்கள் வழிவிடுவதாக அறிவித்துள்ளது. ஆனால் இன்று அதிமுகவின் இன்னொரு அணியின் தலைவரான ஓ.பன்னீர்செல்வம் தம்மை சந்தித்து ஆதரவு கோரிய பின்னர் அதிமுகவில் எந்த அணிக்கு ஆதரவு என்று தெளிவுபடுத்த வேண்டிய சூழலில் ஜி.கே.வாசன் உள்ளார். அக்கூட்டணியில் உள்ள பிற அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இதே போன்ற தர்மசங்கடம்தான் ஏற்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் உருவாகும்போது ஏற்பட்ட பரபரப்புகளுக்கு இணையான பரபரப்பு தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவில் எந்த அணியுடன் எந்த கட்சி கைகோர்க்கப்போகிறது என்ற விஷயத்திலும் காணப்படுகிறது. தற்போதைய சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி தோல்வி யாருக்கு என்பதைவிட அதிமுக உட்கட்சி பிரச்சனையே அதிக பேசு பொருளாகியுள்ளது.

இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே என ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பினரும் உறுதிபடத்தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதிமுகவை தற்போது சூழ்ந்துள்ள சட்ட சிக்கல்களால் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள்  சுயேட்சை சின்னத்தில் களம் இறங்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.  அவ்வாறு சுயேட்சை சின்னத்தில் களம் இறங்கும் சூழல் ஏற்பட்டால் அதுவும் ஒரு வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு உகந்த முடிவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து கட்சி சட்டவிதிகளில் ஏற்பட்ட திருத்தங்கள்தான் பதிவாகியுள்ளது. அதே போல் கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கடந்த 2018ம் ஆண்டு தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதம்தான் அந்த ஆணைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகு அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிடையே பிரச்னை ஏற்பட்டு அது தொடர்பாக இரு அணியிலும் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. பரஸ்பரம் இருதரப்பும் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றே தெரிகிறது.

இதனாலேயே ரிமோட் வாக்கெடுப்பு தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டே தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில்  எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதியில் தாம் நிறுத்தும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுவதற்கு ஏ பார்ம் மற்றும் பி பார்மில் ஓபிஎஸ் கையெழுத்தையும் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் முடிவதற்கு முன்பு உச்சநீதிமன்ற தீர்ப்பும், அதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் முடிவும் தனக்கு சாதகமாக வராத வரையில் இந்த நெருக்கடியை இபிஎஸ் சந்தித்தே ஆக வேண்டும்.

அத்தகைய சூழலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து ஏ-பார்ம், பி-பார்மில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட நேர்ந்தால் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதையும், இரட்டை தலைமை நிலைப்பாட்டையும் ஒப்புக்கொண்டதுபோல் ஆகிவிடும். அதிமுகவிற்கு உரிமை கோருவதிலும், தம்மை கட்சியின் ஒற்றை தலைமையாக நிலைநிறுத்துவதிலும் எடப்பாடி பழனிசாமி படிப்படியாக அடைந்து வரும் முன்னேற்றத்தை இதன்மூலம் ஒரே நேரத்தில் பறிகொடுத்துவிட்டு பிரச்னையை மீண்டும் தொடக்க நிலைக்கே கொண்டு செல்வது போல் ஆகிவிடும் என்கிற கவலையும் இபிஎஸ் அணியினரிடையே இருப்பதாக கூறப்படுகிறது.

சட்டப்போராட்டத்தில் வெற்றிபெற்று இரட்டை இலை சின்னத்தை உறுதி செய்வது, ஓபிஎஸ் உடன் தற்காலிக சமாதானத்தின் மூலம் இரட்டை இலை சின்னத்தை பெறுவது என்கிற இரண்டு வாய்ப்புகளில் முதல் வாய்ப்பைத்தான் பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமி அணியினர் விரும்புவார்கள். சட்ட ரீதியிலான போராட்டத்தின் மூலம் இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் சுயேட்சை சின்னத்தில் களம் இறங்குவதையே இபிஎஸ் தரப்பு விரும்பும் எனவும் கருதப்படுகிறது. அப்படி சுயேட்சை சின்னத்தில் களம் இறங்கும்போது சில சவுகரியங்களும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு உள்ளது. அவை என்னென்ன?

1) ஓபிஎஸ் உடன் அதிகாரப் பகிர்வு செய்ய வேண்டிய நெருக்கடியை தவிர்த்துவிடலாம்.

2) உச்சநீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி வைக்கப்பட்ட வாதங்களுக்கு வலுசேர்க்கலாம்.

2) இடைத் தேர்தலில் தோற்றால்கூட இரட்டை இலை சின்னம் இல்லாமல் களம் இறங்கியதை சுட்டிக்காட்டலாம். இதன் மூலம் அதிமுகவின் உண்மையான பலத்தை இந்த தேர்தல் பரிசோதிக்கவில்லை என்கிற வாதத்தையும் முன் வைக்க முடியும்.

3) இரட்டை இலை சின்னம் முடக்கப்படாமல் இருந்த சூழலிலும் அதனை பயன்படுத்த முடியாமல் போனதற்கு ஓபிஎஸ்தான் காரணம் என்கிற குற்றச்சாட்டையும் முன்வைக்கலாம்.

4) சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால், அது 34 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் ஏற்பட்டது போன்ற திருப்பத்தை மீண்டும் அதிமுகவில் ஏற்படுத்தலாம். கடந்த 1989ம் ஆண்டு, சட்டப்பேரவை தேர்தலைச் சந்தித்தபோது,  அதிமுக இரண்டு பிரிவுகளாக இருந்தது. ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், ஜானகி தலைமையில் ஒரு அணியும் களத்தில் இறங்கின. இதில் ஜெயலலிதா அணியே அதிக இடங்களில் வென்று பலத்தை நிரூபித்தது. அதிமுக (ஜெ) அணி தலைமையிலான கூட்டணி 30 இடங்களில் வென்ற நிலையில் அதிமுக (ஜா) அணி தலைமையிலான கூட்டணி 2  இடங்களிலேயே வென்றது. இதையடுத்து அந்த தேர்தலுக்கு பின்னர் ஜெயலலிதாவின் செல்வாக்கை புரிந்துகொண்டு அவரது தலைமையில் இரு அணிகளும் ஒன்றிணைந்தன. அரசியலில் இருந்தே ஒதுங்கினார் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில், சுயேட்சை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு களம் இறங்கி வென்றுவிட்டாலோ அல்லது ஓபிஎஸ் நிறுத்தும் வேட்பாளரைவிட அதிக வாக்குகளை பெற்றாலோ இபிஎஸ்தான் அதிமுகவின் ஒற்றை தலைமை என்பதை உறுதி செய்ய ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு பல்வேறு காரணங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சை சின்னத்தில் களம் இறங்குவதும் நல்லதுதான் என்ற கருத்தை முன்வைப்பவர்கள் எடுத்துரைக்கின்றனர்.

அதே நேரம் ஒரு இடைத் தேர்தலை வைத்து கட்சியில் மாற்றத்தை செய்துவிட முடியாது என கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை  உதாரணமாக வைத்து கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட டிடிவி தினகரன் அமமுக என்கிற தனிக்கட்சியை தொடங்கி சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். ஆனாலும் அவரால் அதிமுகவை தம்மோடு ஒன்றிணைக்கவோ அல்லது அதிமுகவுடன் அமமுகவை ஒன்றிணைக்கவோ முடியவில்லை என்கிற உதாரணமும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் அதிமுகவில் தற்போது நிகழும் உட்கட்சி பிரச்சனைக்கு தம் பங்கிற்கும் ஈரோடு கிழக்கு தொகுதி ஏதாவது ஒரு தீர்வை முன்வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடையே நிலவுகிறது.

-எஸ்.இலட்சுமணன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சசிகலா விடுதலையானபின், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது! – மு.க.ஸ்டாலின்

Nandhakumar

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்

EZHILARASAN D

தமிழகத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

Halley Karthik