சமூக ஊடகங்களில் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாடும் செல்வாக்கும் அதிகரித்து வருவதால் அவற்றில் விளம்பரங்கள் செய்வதற்கு மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவர்கள், சமூக ஊடகங்களில் அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்கள் அல்லது பிராண்டு மூலம் கிடைக்கும் வருமானம் அல்லது பொருள்ரீதியாக பெறுகின்ற பயன்களின் விவரங்கள் குறித்து கட்டாயமாக வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் விளம்பரங்களில் sponsored அல்லது advertisement அல்லது paid promotions என்ற வாசகங்களுடன் விளம்பரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரங்கள் என்ற நிலையையும் தாண்டி பல்வேறு ஆதாயங்களுக்காக சமூக ஊடக விளம்பரங்கள் அதிக அளவில் வெளியிடப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
விளம்பரங்களை திரித்துக் கூறினாலோ, தவறான விளம்பரங்களை வெளியிட்டாலோ 2019ஆம் வருடத்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தால் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.