ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய சவால் விடும் அளவிற்கு
போட்டி இருப்பதாக கருதவில்லை என காங்கிரஸ் வேட்பாளரான ஈபிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேல்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மணப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மேலிடம் என் மீது நம்பிக்கை வைத்து வேட்பாளராக அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
என்னுடைய இளைய மகனை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் மேலிடத்திடம் கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு காங்கிரஸ் மேலிடத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என்றார். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியதற்கு நன்றி என்றும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை அடைவேன் என கூறினார்.
மேலும் இடைத்தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 4 அணிகளும் போட்டியிடாமல் பாஜகவின் வேட்பாளரை நிறுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன். அப்படி நிறுத்தினால் மிக இலகுவாக திமுக கூட்டணி வெற்றி பெறும். வேட்பாளர் அறிமுகத்திற்கு முன்பே திமுக அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இடைத்தேர்தலில் மிகப்பெரிய சவால் விடும் அளவிற்கு
போட்டி இருப்பதாக கருதவில்லை. திமுக கூட்டணி மிக சுலபமாக இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். அத்தோடு ,முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். முதலமைச்சரை நேரில் சந்தித்த பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை நேரில் சந்தித்து விட்டு ஈரோடு சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசித்த பின்னர் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன் என்றார்.
மேலும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மக்கள் கே.ராஜன் இடைத்தேர்தலில் நிற்பதற்காக சீட் கேட்டதில் எந்த ஒரு தவறும் இல்லை. அவர் சீட் கேட்பதற்கான முழு உரிமை இருக்கிறது. ஆனால் கொஞ்சம் அழுதிருக்க வேண்டாம் என மட்டும் நினைக்கிறேன் என கூறினார்.