கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பேருந்தும், பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு சென்ற தனியார் பேருந்தும் மேல்பட்டாம்பாக்கம் சாலையில் வந்தபோது பண்ருட்டியிலிருந்து வந்த பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. அப்போது கடலூரிலிருந்து வந்த பேருந்து ஓட்டுநர் சீரற்று வந்த பேருந்து மோதாமல் இருக்க, பேருந்தை சாலை ஓரமாக ஓட்டினார். ஆனாலும் முன் டயர் வெடித்து சீரற்று வந்த பேருந்து எதிரில் வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து சென்றனர். தீயணைப்புத்துறை வீரர்களோடு அப்பகுதியில் இருந்த இளைஞர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நேருக்குநேர் மோதியதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 96-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மருத்துவமனையில் நேற்று ஒருவர் பலியானார். இந்நிலையில், இன்று மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்று பலியானதாகவும், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.








