சேலம் அண்ணா பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழி நடுங்கிலும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், சேலம் மாநகராட்சி அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த 16 அடி உயர முழுஉருவ வெண்கல சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, 96 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பழைய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகளில் பேருந்து நின்று செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









