எலான் மஸ்க்கின் வாசனைத் திரவியத்தை வாங்கிக்கொண்டால் தான் அவரால் டிவிட்டரை வாங்க முடியும் என அவர் டிவீட் செய்திருப்பது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் நேற்று பர்ண்ட் ஹேர் (Burnt Hair) என்ற புதிய பெர்ஃபியூமை தனது போரிங் கம்பெனி ( Boring Company) மூலம் அறிமுகப்படுத்தினார்.
இந்த பெர்ஃபியூமை போரிங் கம்பெனி இணையதளம் வாயிலாக வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், கிரிப்டோகரன்சியான டோஜ்காயினை (Dogecoin) வைத்தும் கட்டணம் செலுத்தலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும் டிவிட்டர் பக்கத்தில் தனது பயோவை வாசனை ‘திரவிய விற்பனையாளர்’ (Perfume Salesman) என மாற்றியிருக்கிறார் மஸ்க்.
அதுமட்டுமின்றி இன்று எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில்,”தயவு செய்து என்னுடைய பெர்ஃபியூமை வாங்குங்கள், நான் டிவிட்டரை வாங்குகிறேன் ” ( Pls buy my perfume so I can twiter) என பதிவிட்டுள்ளார்.
டிவிட்டர் நிறுவனத்தை வாங்க மறுத்ததைத் தொடர்ந்து அந்நிறுவனம் மஸ்க் மீது வழக்குத் தொடுத்திருந்தது. இதனிடையே ட்விட்டர் நிறுவனத்தினை முன்குறிப்பிட்ட தொகைக்கே வாங்கிக்கொள்வதாக மஸ்க் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், தனது வாசனைத் திரவியத்தை வாங்கிக்கொண்டால் தான் தன்னால் டிவிட்டரை வாங்க முடியும் என அவர் டிவீட் செய்திருப்பது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
சுமார் 100 டாலர் விலைக்கு இந்த பெர்ஃபியூம் அறிமுகமாகியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 8,400 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று அவர் பதிவிட்ட ஒரு டிவீட்டில் இந்த வாசனைத் திரவியம் 20,000 பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகச் சூசகமாகத் தெரிவித்திருந்தார்.







