புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி வரை மொத்தம் 14 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் 2023-24ம் ஆண்டு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. முன்னதாக சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் தமிழிசை காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து சபாநாயகர் செல்வம் பூங்கொத்து கொடுத்து துணைநிலை ஆளுநரை வரவேற்று பேரவைக்கு அழைத்து சென்றார்.
பின்னர் பாரதியாரின் வரிகளுடன் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது உரையை தொடங்கினார். ஆளுநர் தனது உரையை முடித்த பின்னர் பேரவையில் இருந்து
புறபப்பட்டு சென்றார். ஆளுநர் உரை நிறைவடைந்த பிறகு சபாநாயகர் செல்வம் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இதையும் படிக்கவும்: 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், நாளைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் பேரவையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும், வரும் 13 ஆம் தேதி நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
14ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானமும், தொடர்ந்து 15ம் தேதி பட்ஜெட் மீது விவாதமும் நடைபெறும். அதனைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி வரை மொத்தம் 14 நாட்கள் நடைபெறும்.
சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் போது அனைத்து துறையின் அதிகாரிகள் சட்டப்பேரவையில் இருக்க வேண்டும் என தலைமை செயலர் மூலம் துறை அதிகாரிகளுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.







