இந்தியா, இலங்கை நாடுகளில் நடைபெற உள்ள டி 20 உலக கோப்பை தொடரானது பிப். 7 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, உள்ளிட்ட பல்வேறு நாட்டு அணிகள் பங்கேற்கின்றன.
இதற்கிடையில் டி 20 உலக கோப்பை தொடருக்காக மிட்செல் மார்ஷ் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டது. தொடருக்கு தயாராகும் விதமாக இந்த அணி பாகிஸ்தானில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மேலும் ஆஸ்திரேலியா அணியானது பிப்ரவரி 11 அன்று கொழும்பில் நடைபெறும் தனது முதற்போட்டியில் அயர்லாந்தை எதிர்க்கொள்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் டி 20 உலக கோப்பை தொடருக்கான அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார். தொடர் முதுகு வலி காரணமாக பேட் கம்மின்ஸ் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பேட் கம்மின்ஸிற்கு பதிலாக பென் டுவார்ஷியஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளர் டோனி டோட்மைட், ”முதுகு காயத்திலிருந்து மீள கம்மின்ஸுக்கு அதிக நேரம் தேவைப்படும். இதையடுத்து இடது கை வேக பவுலிங் , டைனமிக் ஃபீல்டிங் மற்றும் லேட்-ஆர்டர் ஹிட்டிங் ஆகியவற்றை வழங்கும் பென் டுவார்ஷியஸை ஒரு சரியான மாற்றாக தேர்ந்தெடுத்துள்ளோம். நல்ல வேகத்தில் பந்தை ஸ்விங் செய்யும் அவரது திறமையும், புத்திசாலித்தனமான வேக மாறுபாடுகளும், நாங்கள் எதிர்பார்க்கும் நிலைமைகளுக்கும் அணியின் ஒட்டுமொத்த அமைப்புக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல மற்றொரு வீரரான மேட் ஷார்ட்டும் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக மேட் ரென்ஷா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.







