ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடியை வழங்கிய BTSன் ஜங்கூக்…!

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடி கோடியை BTS உறுப்பினர் ஜங்கூக் வழங்கியுள்ளார். உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் தென்கொரியாவைச் சேர்ந்த BTS-ம் ஒன்று. ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப்,…

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடி கோடியை BTS உறுப்பினர் ஜங்கூக் வழங்கியுள்ளார்.

உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் தென்கொரியாவைச் சேர்ந்த BTS-ம் ஒன்று. ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த இசைக்குழு, தனது வசீகர குரலாலும், நடனத்தாலும், உற்சாகமூட்டும் பாடல் வரிகளாலும், பலரது மனங்களையும் கவர்ந்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகமான BTS, ஏராளமான இசை ஆல்பங்களையும், பாடல்களையும் வாரி வழங்கியுள்ளது. பல்வேறு கின்னஸ் சாதனைகளையும், நூற்றுக்கணக்கான விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ளது. BTS மக்களின் மனங்களைக் கவர்வதற்கு அவர்களின் தோற்றமும், பாடல்களும் மட்டுமல்ல. அவர்கள் செய்யும் உதவிகளும் தான்.

இதையும் படியுங்கள் : 11 மாதங்களுக்குப் பின்னர் பாடலை வெளியிடும் BTS – உற்சாகத்தில் ஆர்மி!

உலகையே உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலையை அடுத்து, BTS மற்றும் அதன் தயாரிப்பு நிறுவனமான பிக் ஹிட் சுமார் 16 கோடி ரூபாய் வரை கறுப்பினத்தவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தானமாக வழங்கினர். தென்கொரியாவில் உள்ள UNICEF அமைப்புக்கு, சுமார் 5 கோடி ரூபாய் வரை வழங்கியது. இதேபோல், இசை நிகழ்ச்சிகளில் தாங்கள் பயன்படுத்தும் உடைகளை, ஏலம் மூலம் விற்று, அதில் கிடைக்கும் தொகையை பயன்படுத்தி, உலகளவில் பல்வேறு உதவிகளை BTS குழுவினர் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், BTSன் இளைய உறுப்பினரான ஜங்கூக், சியோலில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவமனைக்கு, இந்திய மதிப்பில் சுமார் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இந்த தொகையை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜங்கூக், “கஷ்டப்படும் குழந்தைகளுக்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர்களின் முகத்தில் புன்னகையை காண, முழு ஆதரவு அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். ஜங்கூக்கின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.