பாஸ்டியன்ஸ் எனும் தென்கொரிய அனிமேஷன் படத்தின் தீம் பாடலை BTSன் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து பாடியுள்ளனர்.
உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் தென்கொரியாவைச் சேர்ந்த BTS-ம் ஒன்று. ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த இசைக்குழு, தனது வசீகர குரலாலும், நடனத்தாலும், உற்சாகமூட்டும் பாடல் வரிகளாலும், பலரது மனங்களையும் கவர்ந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகமான BTS, ஏராளமான இசை ஆல்பங்களையும், பாடல்களையும் வாரி வழங்கியுள்ளது. பல்வேறு கின்னஸ் சாதனைகளையும், நூற்றுக்கணக்கான விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ள இந்த இசைக்குழு, கடந்த ஆண்டு ’ப்ரூஃப்’ எனும் ஆல்பத்தை வெளியிட்டது.
இதையும் படியுங்கள் : பணிந்தது கொல்கத்தா…. 23 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி
தென்கொரிய சட்டவிதிகளின்படி, அந்நாட்டு இளைஞர்கள் கட்டாயமாக ராணுவத்தில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்று பணியாற்ற வேண்டும். அதன்படி BTSன் மூத்த உறுப்பினர் ஜின், கடந்த டிசம்பர் மாதம் ராணுவப் பயிற்சிக்காக சென்றார். அடுத்ததாக ஜே-ஹோப் ராணுவப் பயிற்சிக்காக செல்ல உள்ளார். இதனால் இக்குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சோலோ ஆல்பங்களை வெளியிட்டு வருகின்றனர்.
BTS-ன் ரசிகர் பட்டாளமான ’ஆர்மி’, அனைத்து உறுப்பினர்களும் மீண்டும் எப்போது ஒன்றாக இசை ஆல்பத்தை வெளியிடுவார்கள், இசை நிகழ்ச்சி நடத்துவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்புக்கு தீணி போடும் விதமாக, ’பாஸ்டியன்ஸ்’ எனும் தென்கொரிய அனிமேஷன் திரைப்படத்தின் தீம் பாடலை BTS பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் மே 14 ஆம் தேதி வெளியாகவுள்ள ’பாஸ்டியன்ஸ்’ படம், சுற்றுச்சூழல் மாசுபாட்டை எதிர்த்துப் போராடக்கூடிய சூப்பர்ஹீரோக்களைப் பற்றியதாக அமைகிறது. இந்நிலையில் இப்படத்தின் தீம் பாடல் இடம்பெறும் ஸ்னீக்பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்மூலம் இந்த தீம் பாடலை BTS-ன் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11 மாதங்களுக்குப் பின்னர், அனைத்து உறுப்பினர்களும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். ஜின் ராணுவப் பயிற்சிக்கு செல்வதற்கு முன்னதாகவே இந்த பாடல் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.







