ஒரு தென்னை மரத்திற்காக குடிபோதையில் தம்பியை எரித்து அண்ணன் கொலை செய்துள்ள சம்பவம் நித்திரவிளை பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பள்ளிக்கல் பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ். இவரது தம்பி பிரைட். சகோதரர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி மனைவியோடு வசித்து வந்துள்ளனர். இருவரும் தினமும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த இருவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியேறி அவர்களது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டனர்.
இதன் காரணமாக அண்ணன், தம்பி தனியாக வசித்து வந்துள்ளனர். வேலை இருக்கும் நேரத்தில் வேலைக்கு சென்றுவிட்டு அதில் கிடைக்கும் பணத்தில் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த சூழலில் சம்பவத்தன்றும் இருவரும் வழக்கம் போல் மது அருந்தியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பு இருக்கும் ஒரு தென்னை மரத்தை வெட்டி விற்பனை செய்ய போவதாக பிரைட் கூறியிருக்கிறார். இதற்கு அண்ணன் டென்னிஸ் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும் பிரைட் பிடிவாதமாக அந்த தென்னை மரத்தை வெட்டி விற்பனை செய்யப்போவதாக கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் மதுபோதையில் இருந்ததால் வாய்த்தகராறு கைகலப்பாக மாறியிருக்கிறது.
அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற டென்னிஸ் அருகில் இருந்த மது பாட்டிலை எடுத்து பிரைட்டின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த பிரைட் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்திருக்கிறார். ஆத்திரம் தீராத டென்னிஸ், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து பிரைட் மீது ஊற்றி தீ வைத்து எரித்திருக்கிறார். உடலில் தீ பற்றிய நிலையில் வீட்டினுள் ஓடிய பிரைட் அங்கேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
மறுநாள் போதை தெளிந்த பிறகு டென்னிஸ் என்ன செய்வதென்று தெரியாமல் சடலத்தோடு இரண்டு நாட்கள் வீட்டிலேயே படுத்து உறங்கியிருக்கிறார். டென்னிஸ்சும் பிரைட்டும் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பிரைட் உடல் கருகி உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் மது போதையில் சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தம்பியை அண்ணன் எரித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இக்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிந்து டென்னிசை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே ஒரு தென்னை மரத்திற்காக உடன் பிறந்த தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








