படகோட்டப் போட்டியில் வெண்கலம்… தமிழக வீராங்கனைக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ள தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ஜப்பானின் ஆய்ச்சி – நகோயா மாகாணத்தில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகிறது. அந்த வகையில், மகளிர் பாய்மரப் படகோட்டப் போட்டி (Sailing) டிங்கி பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா குமணன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள படகோட்ட வீராங்கனை நேத்ரா குமணனுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது இச்சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். படகோட்ட வீராங்கனை நேத்ரா குமணனின் வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் பல வெற்றிகளைப் பெற்று புதிய சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகள்”. இவ்வாறு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

நேத்ரா குமணன், பாய்மரப் படகோட்டும் போட்டியில் உலகக் கோப்பை பதக்கம் வென்றவர் என்பதும், இவ்விளையாட்டில் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.