சென்னை; மாத கணக்கில் பழுந்தடைந்து கிடக்கும் போக்குவரத்து சிக்னல்கள்

சாலை விபத்து மரணங்களில் முன்னணியில் இருக்கும் சென்னை பெரு நகரத்தில் மாதக்கணக்கில் போக்குவரத்து சிக்னல்கள் பழுதடைந்து பயனற்று கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த 2021-ம் ஆண்டில் நாடு முழுவதும்…

சாலை விபத்து மரணங்களில் முன்னணியில் இருக்கும் சென்னை பெரு நகரத்தில் மாதக்கணக்கில் போக்குவரத்து சிக்னல்கள் பழுதடைந்து பயனற்று கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த 2021-ம் ஆண்டில் நாடு முழுவதும் நடந்த உயிரிழப்புகள் மற்றும் சாலை விபத்துகள் தொடர்பாக அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் கடந்த 2020-2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சாலை விபத்துகள் காரணமாக 16,685 இறப்புகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் சென்னை பெருநகரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் நடந்துள்ளன.

போக்குவரத்து விதிமீறல் பல்வேறு காரணங்கள் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் சாலை விபத்து மரணங்கள் ஒரு புறமிருக்க முறையான போக்குவரத்துக்கு உதவும் போக்குவரத்து சிக்னல்கள் மாநகரத்தின் பல்வேறு இடங்களில் சேதமடைந்து மாதக்கணக்கில் செயல்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக நியூஸ்7 தமிழ் மேற்கொண்ட கள ஆய்வில் சென்னை மாநகரின் முக்கிய பிரதான பகுதிகளிலேயே போக்குவரத்து சிக்னல்கள் சேதம் அடைந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

ராயப்பேட்டை பீட்டர் சாலை திரு.வி.க நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய பிரதான சந்திப்பில் உள்ள சிக்னல் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக செயல்படாமல் இருக்கிறது. தினசரி லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் தியாகராய நகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள பிரதான பகுதியில் இருக்கும் சிக்னல் மின் வட கம்பிகள் சேதமடைந்த நிலையில் பயனற்று கிடைக்கிறது. ஜி.என் செட்டி சாலை சர்பிடி தியாகராயர் அரங்கம் அருகில் உள்ள பிரதான சிக்னளின் டிஸ்ப்ளே பலகைகள் உடைந்த நிலையில் கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக செயல்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் கண்ணம்மாபேட்டை, மேற்கு மாம்பலம், மேட்டுப்பாளையம் சந்திப்பில் இருக்கும் சிக்னல், வடபழனி லட்சுமி சுருதி சிக்னல் சென்னை மாநகரின் பல பிரதான பகுதிகளில் உள்ள சிக்னல்கள் சேதமடைந்து பயனற்று கிடக்கின்றன. சாலை விபத்தால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுக்கு ஆண்டு சென்னை போன்ற பெரு நகரங்களில் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்தை முறைப்படுத்துவது உதவியாக இருக்கும்.

இந்நிலையில் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதி மீறல்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்து விடுகிறது. எனவே போக்குவரத்து காவல்துறை சார்பாக உடனடியாக இந்த சிக்னல்கள் அனைத்தும் சீர் செய்யப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.