சிறைக்கைதிகள் குறித்து கடந்த சனிக்கிழமை பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சிறைகளில் உள்ள விசாரணைக்கைதிகளில் பெரும்பாலானோர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சாதாரண பின்னணி கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்டு, அவர்களை பெயிலில் விடுவிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், சிறைகளில் உள்ள தண்டனைக்கைதிகள், விசாரணைக்கைதிகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் என்ன கூறுகின்றன என்பதை தற்போது பார்ப்போம்.
தேசிய குற்ற ஆவண காப்பகம் இறுதியாக கடந்த 2020ம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரங்கள் இவை.
இதன்படி, இந்திய சிறைகளில் 4 லட்சத்து 88 ஆயிரத்து 511 கைதிகள் உள்ளனர். இவர்களில், 76 சதவீதம் பேர் அதாவது, 3 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் விசாரணைக்கைதிகள்.
விசாரணைக்கைதிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் டெல்லியும் ஜம்மு காஷ்மீரும் முதலிடத்தில் உள்ளன. இங்கு சிறைகளில் உள்ள கைதிகளில் 91 சதவீதம் பேர் விசாரணைக்கைதிகள். இதற்கு அடுத்த இடத்தை பிகாரும் பஞ்சாபும் பிடித்துள்ளன. இங்கு சிறைக்கைதிகளில் 85 சதவீதம் பேர் விசாரணைக்கைதிகள். 83 சதவீதத்துடன் ஒடிசா மூன்றாம் இடத்தில் உள்ளது.
விசாரணைக்கைதிகளில் 73 சதவீதம் பேர், SC, ST, OBC பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். 20 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள்.
விசாரணைக்கைதிகளில் 27 சதவீதத்தினர் படிப்பறிவற்றவர்கள். 41 சதவீதத்தினர் 10ம் வகுப்புக்கு முன்பாகவே படிப்பை பாதியில் விட்டவர்கள்.
விசாரணைக்கைதிகளில் 30 சதவீதம் பேர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்கள். விசாரணைக்கைதிகளில் 3 மாதத்திற்குள்ளாக விடுவிக்கப்பட்டவர்கள் 65 சதவீதத்தினர் மட்டுமே.









