பிரமோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமையின் அடையாளமாக திகழ்கிறது என சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி கூறினார்.
நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறும் செங்கோட்டைக்கு பிரதமர் மோடி காலை வந்தடைந்தார். முப்படை மற்றும் டெல்லி காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார். பின்னர் காலை 7.30 மணியளவில் செங்கோட்டையில் தேசிய கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது எம்.ஐ.17 1 வி ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவி சென்றது.
பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 300க்கும் மேற்பட்ட ராணுவ தளவாளங்கள் இறக்குமதி செய்யப்படாமல் நாமே தயாரிக்கும் நிலையை எட்டி இருக்கிறோம். குழந்தைகள் கூட வெளிநாட்டு பொம்மைகளை வைத்து விளையாட மறுக்கின்றனர். நமது சுயசார்பு என்பது மின்சாரத் துறையிலும் சிறப்பான முறையில் இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் அத்தியாயத்தில் மிகவும் முக்கியமானது ஆகும்.
எவ்வளவு காலத்திற்கு தான் நாம் பிறரையே நம்பி இருக்க முடியும். அனைத்து துறைகளிலும் சுயசார்பு நமக்கு தேவை. பிரமோஸ் ஏவுகணை என்பது ஒவ்வொரு இந்தியருடைய பெருமையின் அடையாளம். நமது உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். இது பெண்களின் சக்தியை வெளிக்காட்டுவதாக உள்ளது
ஒவ்வொரு துறையிலும் நமது பெண்களுடைய சக்தி அதிகரித்து வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் பெண்க சக்தி ஒவ்வொரு துறையிலும் இன்னும் அதிகரிக்கும். அரசியல் நிர்ணய சபையை உருவாக்கித் தந்தவர்களுக்கும் நான் இன்று இந்த தருணத்தில் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது கூட்டாட்சி ஆரோக்கிய போட்டி கொண்ட கூட்டாட்சியாக மாற வேண்டும். ஒரு மாநிலம் 10 நல்ல திட்டங்களை செய்தால் மற்றொரு மாநிலம் 15 நல்ல விஷயங்களை செய்வதற்கு முன்வர வேண்டும் என்றார்.
இந்த தருணத்தில் ஊழல் மற்றும் குடும்ப நலனுக்காக செயல்படுதல் ஆகிய விஷயங்களை குறித்து பேச விரும்புகிறேன். ஒரு பக்கம் வீடே இல்லாத மக்கள், இன்னொரு பக்கம் தாங்கள் திருடிய பொருட்களை எங்கே வைப்பது என்று தெரியாத மக்கள். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறைவாசம் முடிந்த பின்னர் தலைமை பொறுப்புகளுக்கு வருவதை பார்க்கிறோம்.
எனவே, ஊழலுக்கு எதிரான மனநிலையை மக்கள் கொண்டு வராமல் ஊழல்வாதிகளை, ஊழலை தடுக்க முடியாது. குடும்பநலன் அரசியலில் மட்டும் இல்லை, நாட்டின் ஒவ்வொரு துறையிலும் குடும்ப நலம் வளர்ந்து வருகிறது. இந்த குடும்ப நலன் விவகாரத்தால் நாட்டின் பல திறமையான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குடும்ப நலனுக்கு எதிரான ஒரு எதிர்ப்புணர்வை நாம் உருவாக்க வேண்டும். அரசியலில் குடும்ப நலன் மிக மோசமான விஷயமாக உள்ளது.
குடும்ப நலம் என்பது தான் ஊழலுக்கு வழிவகைக்கிறது. தற்பொழுது, விளையாட்டு துறையில் கூட மாற்றங்களை நாம் காண்கிறோம். உறவினர்கள் இருந்தால் மட்டுமே விளையாட்டு துறையில் இணைய முடியும் என்ற நிலை தற்போது மாறி உள்ளது. நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதோ அத்தனைக்கும் நம்மிடம் தீர்வும் இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாம் ஒரு நொடியும் வீணடிக்காமல் உழைத்தால் தான், நமக்கு சுதந்திரம் பெற்று தந்த தியாகிகளின் கனவுகள் நிறைவேறும்.







