பட்ஜெட் மீதான சட்டப்பேரவை விவாதத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்த பின், செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே வண்டியின் இரு சக்கரங்கள் என்று தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் மீதான சட்டப்பேரவை விவாதத்தின் போது இன்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மரபை மீறி நிதியமைச்சர் செயல்பட்டதால் தான் வெளிநடப்பு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
அப்போது தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர், நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். நிதியமைச்சராகவும், முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பணியாற்றியவர் ஓ.பி.எஸ். அவர் பேசிக்கொண்டிருந்த போதே நிதியமைச்சர் வெளியேறிவிட்டார். அவை மரபை மீறியும், கண்ணியக்குறைவாகவும் நிதியமைச்சர் வெளியேறிவிட்டார். இது எதிர்க்கட்சிகளை அவமானப்படுத்துவதாகவும், ஓ.பி.எஸ், கேட்ட கேள்விக்கு முறையாக பதிலளிக்காமல் கையில் வைத்திருந்த பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிய நிதியமைச்சரைக் கண்டித்தே இன்று வெளிநடப்பு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நீதியரசருக்கு சமமானவர் சபாநாயகர். அவர் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும். அவரின் செயலால் என் மனம் வேதனையடைந்துள்ளது
என்று பேசிய எடப்பாடி பழனிசாமி, எங்களை அவமானப்படுத்தும் போது அவையில் எவ்வாறு இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே வண்டியின் சக்கரங்கள் என்று பேசிய அவர், ஆளும் கட்சிக்கு வாய்ப்பளிக்கும் ஊடகங்கள், எதிர்க்கட்சிக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் பேசினார்.








