பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் முடிவில் இந்திய அணி 178.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 571 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தமாக 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2போட்டிகளில் இந்தியாவும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா முன்னிலையில் உள்ளது.
பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 99 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய விராட்கோலி 59 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 16 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று களமிறங்கிய இந்திய அணி பொறுமையாக நின்று ஆடி 241 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தையும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 75வது சதத்தையும் பதிவு செய்தார். விராட் கோலியுடன் இணைந்த அக்சர் பட்டேல் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்தியாவின் ரன்கள் மளமளவென உயர்ந்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் 79 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய அஷ்வின் 7 ரன்னிலும், உமேஷ் யாதவ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையும் படியுங்கள்: சர்வதேச கிரிக்கெட்டில் 75வது சதம் விளாசிய விராட் கோலி
இறுதியாக சமி மற்றும் கோலி ஜோடி இணைந்தது. விராட் கோலி இரட்டை சதத்தை அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் 186 ரன்கள் எடுத்திருந்தபோது மர்பி பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக விராட் கோலி ஆட்டமிழந்தார்.
போட்டியின் இறுதியில் இந்திய அணி 178.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 571 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் விராட் கோலி 186 ரன்னும், சுப்மன் கில் 128 ரன்னும் எடுத்தனர். இதன் அடிப்படையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 91 ரன் முன்னிலை உள்ளது.
இதனையும் படியுங்கள்: மந்தனா தலைமையில் மந்தமா? – மகளிர் ஆர்சிபிக்கும் தோல்விகள் தொடரும் சோகம்
இதன் பின்னர் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 4ம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்துள்ளது.
– யாழன்







