இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொற்றுப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்திலும் பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களிலும் உள்ளன. கொரோனாவைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது.
பல்வேறு நாடுகள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றன. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியது. ஆனால், இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் இதற்கு கிடைக்காமல் உள்ளது.
அதற்கான அனுமதி வழங்கும்படி, பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் கடந்த மே மாதம் விண்ணப்பித்திருந்தது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தினம் ஆய்வு செய்தது. அனுமதி அளிப்பதற்கான சாதக பாதகங்களை ஆய்வு செய்யும் பொருட்டு கூடுதல் தகவல்கள் மற்றும் விளக்கங்கள் கேட்கப்பட்டதாகவும் நவம்பர் 3ம் தேதி இறுதி முடிவு எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது. அதோடு சீனாவின் BBIBP-CorV தடுப்பூசி செலுத்தியவர்கள் வரவும் அனுமதி அளித்துள்ளது. தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்த ஆஸ்திரேலிய அரசு, அந்தத் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.








