தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் 2030-ம் ஆண்டுக்குள் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் வண்ணம் அரசின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் புத்தகங்கள் மற்றும் இலச்சினையை வெளியிட்டு, நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான சமூக ஊடகங்களை இன்று தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீடித்த வளர்ச்சி இலக்குகளின் 5 அடிப்படைக் கொள்கைகளான, மக்கள், வளம், புவிக்கோள், அமைதி மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை விவரிக்கும் வகையிலும், அரசின் கொள்கை முடிவெடுப்பவர்களுக்கு, திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளின் பயன்களை கண்காணிக்கவும், அதனை மேலும் முன்னேற்றுவதற்கு தேவையான தகவல்களை அளிக்கும் வகையிலும் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய சிறப்பு தினங்களின் கருப்பொருளையொட்டி, ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு நீடித்த வளர்ச்சி இலக்கு அனுசரிக்கப்படவுள்ளதை விளக்கும் வண்ணம், மாத நாட்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் பணிபுரிய ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் நீடித்த வளர்ச்சி இலக்கு தொடர்பான செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தகவல்களை பரப்புவதற்கும் உருவாக்கப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான சமூக ஊடகங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், லிங்க்டின், ட்விட்டர் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை சிறப்பு செயலாளர் த.சு. ராஜசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.