ரூ. 100 கோடி வசூலைக் குவித்த வாத்தி திரைப்படம்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், சம்யுக்தா நடிப்பில் கடந்த மாதம் ‘வாத்தி’ படம் வெளியாகியிருந்தது. நாகவம்சி…

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், சம்யுக்தா நடிப்பில் கடந்த மாதம் ‘வாத்தி’ படம் வெளியாகியிருந்தது. நாகவம்சி மற்றும் சாய் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் படத்தைத் திரையரங்குகளில் வெளியிட்டிருந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்தப் படம் வெளியாகியிருந்தது. தெலுங்கில் ‘சாய்’ என்கிற பெயரில் படம் வெளியானது. தனுஷ் நடிப்பில் வெளியான முதல் நேரடி தெலுங்குப்படம் இதுதான்.

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதே நேரத்தில் தெலுங்கில் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது. அங்கு பாலகிருஷ்ணா உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், வாத்தி திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் சித்தரா என்டர்டெய்மென்ட்ஸ் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். வெளியான 15 நாள்களில் 100 கோடி வசூலை எட்டியதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகியிருந்த திருச்சிற்றம்பலம் படமும் ரூ.100 கோடி வசூலை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.