மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – நெல்லை இளைஞர் கைது

சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நெல்லையை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   சென்னை காவல்துறை…

சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நெல்லையை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது, சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் வெடிகுண்டு வெடித்து தகர்ந்து போய்விடும் என்றும் அந்த மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர்.

 

பின்னர் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில், அந்த அழைப்பு போலியானது என தெரியவந்தது. இதையடுத்து, அழைப்பேசியில் வந்த எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது நெல்லை மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தாமரைக்கண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் கஞ்சா போதையில், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டதும், வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. பின்னர் சென்னை தேனாம்பேட்டை போலீசார் தாமரைக்கண்ணனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.