திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கோடைகால பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரணம்பாக்கம் பகுதியில் திடீரென வயல்வெளியில் குண்டு மழை போல் ஆலங்கட்டி மழை பெய்தது. வானில் இருந்து வெடிகுண்டுகளை வயல்வெளியில் வீசுவது போல் விழுந்ததால் இந்த ஆலங்கட்டி மழையை பொதுமக்கள் வெகுவாக கண்டு ரசித்ததோடு, சிலர் ஆச்சரியமாகவும்மும் அடைந்தனர்.
அதே போல் வந்தவாசி பகுதியில் திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்தது. இந்த ஆலங்கட்டி மழையில் மழைக்கட்டிகளை கையில் ஏந்தியவாறு பாத்திரங்களில் பொதுமக்கள் சேர்த்து கொண்டு சென்று தங்களுடைய வீடுகளில் வைத்தனர். இந்தப் பகுதிகளில் இது போன்ற மழையை வாழ்நாளில் நாங்கள் கண்டதில்லை என பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் சென்னாவரம், பிருதூர், மருதாடு, மும்முனி உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலங்கட்டி மழை நீடித்தது. அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மழையில் நனைந்தபடி ஆலங்கட்டிகளை சேகரித்தனர். மேலும், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









