எஜமானுக்கு உணவு எடுத்துச் செல்லும் பிளாக்கி என்ற செல்லப்பிராணி பற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெமிலிச்சேரி
ஊராட்சியில் வசித்து வருபவர் சுந்தர். இவர் தனியார் கல்லூரியில்
செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். தினந்தோறும் வீட்டிலிருந்து
2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல்லூரிக்கு நடந்தே வேலைக்கு செல்லும் இவர், கூடவே தான் வளர்க்கும் பிளாக்கி என்ற செல்லபிராணியையும் அழைத்துச் செல்கிறார்.

இவருடன் செல்லும் பிளாக்கி தன்னுடைய வாயில், சுந்தரின் உணவு மற்றும் தனக்கு தேவையான உணவையும் எடுத்துக் கொண்டு 2 கிலோமீட்டர் தூரம் கவ்வி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
தன் வாயினால் உணவு பையை சுமந்தபடி எஜமானுடன் வீரநடை போட்டு செல்கின்றது பிளாக்கி. தினமும் காலை மற்றும் மாலையில் பிளாக்கி செல்வதை அவ்வழியாக செல்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
பிளாக்கி குறித்து அதனுடைய உரிமையாளர் சுந்தர் தெரிவித்தாவது:
சிறு வயதிலிருந்தே நாய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது பெற்றோர் செல்லபிராணி வளர்ப்பிற்காக என்னை அனுமதித்ததில்லை. திருமணமான பின்பு ஒரு நாள் பிளாக்கி என்னை தேடி வந்தான், அவனை என் வீட்டிற்கு அழைத்து சென்றேன், என் மனைவி சம்மதிக்கவில்லை; இந்த பிளாக்கிக்காக என்னுடைய மனைவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பிளாக்கியை 9 ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன்.
”அது நாய் இல்ல; என் புள்ள” என்று கூறி பிளாக்கியும் நானும் ஒன்றாக வசித்து வருகிறோம். என்னுடைய செல்லக்குழந்தையாக இதை வளர்த்து வருவேன் என்றும் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் பிடித்தமான தருணம் இதனுடன் இருப்பது தான் என்றும் அவர் கூறினார்
சுந்தருடன் சாப்பாட்டுப் பையை கவ்வியபடி பிளாக்கி செல்லும் காணொளி காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.







