கருப்புப் பூஞ்சை: அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்து கிடைக்க ராமதாஸ் கோரிக்கை!

கருப்புப் பூஞ்சைக்கான மருந்து, மாவட்ட மருத்துவமனைகளிலும் கிடைக்க வேண்டும் என்றுதமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருப்புப் பூஞ்சை நோயை குணப்படுத்து வதற்கான ஆம்போடெரிசின்-பி…

கருப்புப் பூஞ்சைக்கான மருந்து, மாவட்ட மருத்துவமனைகளிலும் கிடைக்க வேண்டும் என்று
தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருப்புப் பூஞ்சை நோயை குணப்படுத்து வதற்கான ஆம்போடெரிசின்-பி (Amphotericin B) எனப்படும் ஊசி மருந்துக்கு கடுமையானத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை தவிர்த்த பிற நகரங்களில் இந்த மருந்து கிடைக்கவில்லை. நாடு முழுவதும் இந்த மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் 6 லட்சம் டோஸ் மருந்துகளை, மத்திய அரசு இறக்குமதி செய்திருப்பதாகத் தெரிகிறது.

அதிலிருந்து தமிழகத்திற்குரிய பங்கை பெற்றும், இந்த மருந்தை தயாரிக்கும் 6 தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்தும் முதல்கட்டமாக தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்தக் கட்டமாக வட்ட மருத்துவமனைகளிலும் இந்த மருந்து மற்றும் மருத்துவ வசதியை உறுதி செய்ய வேண்டும்.

கருப்புப் பூஞ்சை நோய் குறித்த விவரங்களை அறிந்து விழிப்புடன் இருப்பதாலும், அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவதன் மூலமும் இந்த நோயை வெல்ல முடியும். எனவே, மக்கள் கருப்புப் பூஞ்சை நோய் குறித்த அச்சம் இல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.