மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சிஐடி விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பியாக கடந்த 2018-ஆம் ஆண்டு சுவேந்து அதிகாரி இருந்த போது, அவரது பாதுகாப்பு அதிகாரி சுபோபிரதா சக்ரவர்த்தி என்பவர் துப்பாக்கியால் சுட்டுத் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டு மென அவர் மனைவி புகார் செய்தார்.
இது தொடர்பாக, மாநில சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 15 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரிக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி இன்று காலை ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிஐடி விசாரணைக்கு சுவேந்து அதிகாரி இன்று ஆஜராகவில்லை. அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால், சிஐடி விசாரணைக்கு இன்று ஆஜராக இயலாது என்று அவர் மெயில் அனுப்பி இருப்பதாக சிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகனும் அக்கட்சி எம்பியுமான அபிஷேக் பானர்ஜி, அவர் மனைவி ருஜிரா பானர்ஜி ஆகியோருக்கு நிலக்கரி ஊழல் வழக்கில் அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி இருந்த நிலையில், சுவேந்து அதிகாரிக்கு மாநில சிஐடி சம்மன் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சுவேந்து அதிகாரி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். நந்திகிராம் தொகுதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.







