5 மாநில தேர்தல் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் 4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளனர்.
5 மாநிலங்களில் நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலானது நாட்டு மக்களிடையே அதிகம் கவனம் ஈர்த்த தேர்தலாக உள்ளது. இந்த மாநிலங்களில் மத்தியில் ஆளும் பாஜக வெற்றிபெறுமா அல்லது எதிர்க்கட்சி அரசியலில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா, 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பாஜக போட்டியிட்டுள்ள அதிகப்படியான இடங்களில் வெற்றியும் பெறுவோம் என்று பேசியுள்ளனர். இது தொடர்பாக பேசிய நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களான கோவா, மணிப்பூர், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இருவரும், 5 மாநில தேர்தலில் வெற்றி பெற பிற கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு தேவைப்படாது என்று குறிப்பிட்டனர். எந்த மாநிலத்திலும் மற்ற கட்சிகளுடன் நெருக்கமான போட்டி இல்லை என்றும் பாஜகவே தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேசத்தில் சில தலைவர்கள் வேண்டுமானால் எங்கள் கட்சியில் இருந்து வெளியேறலாம், ஆனால் தொண்டர்கள் எப்போதும் வெளியேற மாட்டார்கள் என்று பேசினார். தொடர்ந்து, 2017ம் ஆண்டு உத்தரபிரதேச தேர்தலில் பாஜக கொடுத்த வாக்குறுதிகளில் 92 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம் என்று தெரிவித்தார்.








