வரும் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற உள்ள கூட்டத்தில், எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்று கூடும் பட்சத்தில் 2024 நாடளுமன்றதேர்தலில் பாஜக அகற்றப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆழித்தேர் வடிவில் 7,000 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது கலைஞர் கோட்டம். இதில் கருணாநிதியின் உருவச்சிலை, அவரது தந்தை முத்துவேலர் நினைவு நூலகம், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம், கூட்ட அரங்கு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இதன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பாகவே சென்னையில் இருந்து திருவாரூர் வந்து விட்டார். நேற்று விழா ஏற்பாடுகளை கவனித்த அவர், இன்று காலையிலும் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் ஆகிய கலை நிகழ்ச்சிகளிலும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சிறப்பித்தது மட்டுமின்றி நிகழ்ச்சிகளையும் முழுமையாக இருந்து கண்டு மகிழ்ந்தார்.
காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் உணவு இடைவேளைக்கு பிறகு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. கலைஞர் கோட்டத்தினையும், கருணாநிதி உருவச்சிலையையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் பீகார் துணை முதலவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்று முத்துவேலர் நினைவு நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதாக இருந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கடைசி நேரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை. இருந்தும் நிகழ்ச்சியில் பங்கேற்காவிட்டாலும், தனது சார்பில் வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அனுப்பியிருந்த அந்த வாழ்த்துச் செய்தியை திருச்சி சிவா விழா மேடையில் வாசித்தார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருந்தாவது ;
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்துகொள்ளாதது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றை விழா சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி கலைஞர் பெண்களுக்கு சொத்துரிமை பெற்று தந்தது மட்டுமின்றி 35 % இட ஒதுக்கீட்டை வாங்கி கொடுத்தவர். பெண்களின் முன்னேற்றத்திற்காக மிக முக்கிய பங்காற்றிய மனிதர்.
அவரது வழியில், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பயணித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிகார் மாநில தொளிலார்கள் சிலர் தாக்கப்பட்டது தொடர்பாக முதல்வரிடம் பேசினேன். அப்போது அது போன்ற எந்த பிரச்சினையும் இல்லை என்பதை ஆதார பூர்வமாக முதலமைச்சர் எனக்கு தெரிவித்தார். மேலும் வெளி மாநில தொலிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இருப்பதை தமிழக முதலமைச்சர் உறுதி செய்தார்.
ஜூன் – 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். எதிர்கட்சிகள் ஒன்று கூடும் பட்சத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக அகற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா









