மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திமுக செயலாளர் போல செயல்படுவதாக கரு.நாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் சென்னை தி.நகரிலுள்ள கமலாலயத்தில் பாஜக மாநில இளைஞரணியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் தலைமையில் நடைபெறும், இந்த செயற்குழுக் கூட்டத்தில் நீட் தேர்வு, குடியுரிமை திருத்த சட்டம், ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அந்த துறையின் செயலாளரா? இல்லை திமுகவின் செயலாளரா? என்று தெரியவில்லை என்று குறிப்பிட்ட கரு.நாகராஜன், “நீட் குழுவுக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு மாணவராகவோ, பெற்றோராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.திமுகவின் கூட்டணி கட்சிகள் வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ள கேட்டுள்ளது. நாளை நீதிமன்றத்தில் எங்கள் வலுவான கருத்துகளை எடுத்துரைப்போம்” என்று கூறினார்.







