பாஜக கையெழுத்து இயக்கம் – மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்க கோரி மாணவர்களை கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக வந்த புகாரின் பேரில்பாஜகவினர் 5 மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்மொழிகளைக் கற்றுக் கொடுக்கக் கோரும் தமிழக பாஜகவின் கையெழுத்து இயக்கம், நேற்று(மார்ச்.07) தொடங்கியது. தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி தேசிய கல்விக்கொள்கைக்கு பாஜகவினர் ஆதரவு திரட்ட்டி வருகின்றனர். அதே போல் ஆன்லைன் வாயிலாக ஆதரவளிக்க puthiyakalvi.in என்ற இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி முகப்பு வாயிலில் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவர்களுக்கு மும்மொழி கல்வி கொள்கை குறித்து எடுத்து கூறிய பாஜகவினர் மாணவர்களை கையெழுத்திடச் செய்தனர். அத்துடன் மாணவர்களுக்கு பிஸ்கட்-களை வழங்கியுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களை பாஜகவினர் கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக  கையெழுத்து வாங்கியதாக சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல குழு சார்பில் புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, நிகழ்சி ஏற்பட்டாளர் பாஜக கவுன்சிலர் சுந்தரம், முன்னாள் மண்டல தலைவர் மோகன் குமார்,(45), சென்னை கிழக்கு மாவட்டம் முன்னாள் மாவட்ட செயலாளர் கோட்டீஷ்வரன்(45), முன்னாள் அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் அன்பரசன்(44) ஆகியோர் மீது 126(2), 192, BNS Act & 3 JJ Act உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த காவல் நிலையத்தில் 100 பாஜகவினர் குவிந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நாங்களும் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் எங்களையும் கைது செய்யுங்கள் என போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல் நிலைய வளாகத்தில் திடீரென கிழே ஒருசிலர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு  செம்மஞ்சேரி உதவி ஆணையாளர் வைஷ்ணவி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காவல் நிலைய வளாகத்தில் இருந்து வெளியேற்றினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.