முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

தனித்து களமிறங்க தயாராகும் பாஜக? – பரபரப்பை கூட்டும் அரசியல் களம்


ஜோ.மகேஸ்வரன்

கட்டுரையாளர்

மக்களவைத் பொதுத் தேர்தலில் உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் எதிர்பார்த்த இடங்கள் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கை பாஜகவிற்கு இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில், முக்கிய கூட்டணிக் கட்சியான அதிமுக நான்காக பிரிந்து கிடக்க, பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த கட்ட நகர்வு என்ன? பார்க்கலாம்.

வரும் 2024 மக்களவைத் பொது தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். தென் மாநிலங்களில் இருந்து அதிக எம்.பிக்களைப் பெற வேண்டும் என்று பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டைப் பொருத்தவரை, வாக்கு வங்கி சிதறாத அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் அதிக இடங்களில் வெற்றி பெற முடியும் என்பதால், தனிக் கட்சி தொடங்கியுள்ள டிடிவி தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ், வி.கே.சசிகலா ஆகியோரை ஓருங்கிணைக்கவும் திட்டமிடப்பட்டு, அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்கிறார்கள் மூத்த தலைவர்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக, மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் அதிமுக பெரிய கட்சி. அக்கட்சி தலைமையில்தான் கூட்டணி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதும் அதற்காகத்தான். அதேநேரத்தில், கூட்டணி ஒரு பக்கம் இருந்தாலும், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நீலகிரி, தென்சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 தொகுதிகளை தேர்வு செய்து அங்கெல்லாம் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளை தொடங்கி விட்டதாகவும், அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக முடிவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சிகளுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகியோர் ஒத்து வந்து, ஓர் புள்ளியில் நிற்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கும் நிலையில், அதற்குள் அவரை வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று டெல்லி மேலிடம் நினைப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் சமீபத்திய பேச்சுகள் கூட்டணிக்குள்ளும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, கூடுதல் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. குறிப்பாக, மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் அண்மையில் அவர் பேசுகையில், ’5, 6 சீட்டிற்காக ரொம்ப இறங்கிப் போக வேண்டியதில்லை. கூட்டணிக் கட்சி ஒத்து வந்தா பார்ப்போம். இல்லன்னா தனித்து நிற்போம். தனித்து நின்றால், 20 இடங்களுக்கு மேல் பிடிப்போம். அதில் 5 பேர் அமைச்சராவது உறுதி’ என்றெல்லாம் அண்ணாமலை பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாமலையின் இந்த பேச்சு, பாஜகவினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், கள யதார்த்தம் தெரிந்த சில மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கையும் கொடுத்துள்ளனர். கட்சி கட்டமைப்புள்ள அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்வது சரியானதல்ல என்றும் சொல்லியுள்ளனர். ஆனால், ’அதிமுக முன்பு போல் இல்லை. ஒருங்கிணைந்தால்தான் அவர்களின் வாக்கு வங்கி இருக்கும். ஆனால், பாஜக முன்பு போல் இப்ப இல்ல. அனைத்து கிராமங்களுக்கும் சென்று விட்டோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று பல இடங்களில் வெற்றி பெறவில்லையா? அது போல துணிந்து பணியாற்றுங்கள், வெற்றியை வசப்படுத்தும் வழிமுறை நம்மிடம் இருக்கிறது’ என்று நம்பிக்கை அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தனித்து நிற்போம் என்கிற பாஜகவின் பேச்சுக்கு பின்னால் ஒரு அரசியல் கணக்கும் இருக்கிறது. குறிப்பாக ‘அடம் பிடிக்கும் கூட்டணிக் கட்சிக்குத்தான் நம்முடைய தயவு தேவை’ என்கிற ரீதியில், அவர்களுக்கு கொடுத்த எச்சரிக்கையாகவும், மறு பக்கம் நிர்வாகிகள், தொண்டர்களை ஊக்கப்படுத்தி, கட்சியை வளர்க்கும் திட்டமாகவும் இதை பார்க்க வேண்டும் என்கிறார்கள் மூத்த தலைவர்கள்.

குறைந்த இடங்களில் நின்றாலும் வெற்றிக்கு வாய்ப்பு என கூட்டணிக் குதிரையில் சவாரி செய்யுமா? தனித்து நின்று பலத்தைக் காட்டி கட்சியை வளர்க்குமா…? என்கிற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“ஊரின் பெயரை காணவில்லை”; போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

G SaravanaKumar

மின்துறையில் ப்ரீபெய்டு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: அதிமுக அன்பழகன்

Web Editor

உலகம் முழுவதும் வசூல் சாதனையில் கலக்கும் பொன்னியின் செல்வன்!

G SaravanaKumar