ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதலமைச்சர் பதவி – பாஜக அதிரடி

சிவ சேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் பதவியை அளிக்க பாஜக முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஸ்ஸாமின் குஜஹாத்தி நகரில் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி இருக்கும் சிவ…

சிவ சேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் பதவியை அளிக்க பாஜக முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஸ்ஸாமின் குஜஹாத்தி நகரில் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி இருக்கும் சிவ சேனா அதிருப்தி தலைவரான ஏக்நாத் ஷிண்டே, தங்களுக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக இன்று தெரிவித்தார். அதோடு, விரைவில் மும்பை திரும்ப உள்ளதாகவும், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப் போதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், குவஹாத்தியில் இருந்தவாறு அவர்கள் பாஜகவோடு சேர்ந்து கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவது தற்போது வெளியாகி உள்ளது.
பாஜகவும், அவர்ளோடு சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2019ல் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சி அமைத்தது. தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றனர்.
எனினும், தேசியவாத காங்கிரஸ் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க மறுத்ததை அடுத்து, சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்படுத்தப்பட்டது.
தற்போது, சிவ சேனா அதிருப்தி அணியில் 50 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் தேவை எனும் நிலையில், கூடுதலாகவே 10 எம்எல்ஏக்கள் இருப்பதால், இக்கூட்டணி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.

இந்த சூழலில், 2019ல் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டதுபோன்று, துணை முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு அளிக்க பாஜக முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், துணை முதலமைச்சர் பதவி இல்லாமல், 12 அமைச்சர் பதவிகளை ஏக்நாத் ஷிண்டே தரப்பில் கோரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு பாஜக இன்னும் சம்மதம் தெரிவிக்காததால், இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் மும்பை வர வேண்டும் என்று சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே ட்விட்டரில் உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இன்னும் காலம் கடக்கவில்லை என்றும், அனைவரும் மும்பை வந்து தன்னோடு ஆலோசனை நடத்துமாறு சிவ சேனா எனும் குடும்பத்தின் தலைவர் என்ற முறையில் மனப்பூர்வ வேண்டுகோளை விடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேரில் சந்தித்து பேசுவதன் மூலம் தற்போதள்ள குழப்பத்திற்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் குவஹாத்தியில் இருந்தாலும் உங்கள் மனம் சிவ சேனாவுடன்தான் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரேவின் ட்விட்டர் பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, உத்தவ் தாக்கரேவின் பதிவு உருக்கமானதாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தைவிட்டு சிலர் பிரிந்து சென்றால், ஒட்டுமொத்த குடும்பமும் அவர்களை திரும்ப அழைக்க முயல்வதைப் போல் உத்தவ் தாக்கரேவின் பதிவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.