தங்களுக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக சிவ சேனாவின் அதிருப்தி பிரிவு தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
சிவ சேனாவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உடனான கருத்து வேறுபாடு காரணமாக தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்.
அஸ்ஸாமின் குவஹாத்தியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் தங்கி உள்ளனர்.
அவருக்கு சிவ சேனா அமைச்சர்கள் 9 பேர் உள்பட சிவ சேனா எம்எல்ஏக்கள் சுமார் 40 பேர் ஆதரவு அளித்துள்ளனர். சுயேட்சைகள் 9 பேரும் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது குவஹாத்தியில் தங்கி உள்ளனர்.
இந்நிலையில், குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, தங்களுக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டார். விரைவில் தாங்கள் மும்பைக்கு வர உள்ளதாகவும் அவர் கூறினார்.
தாங்கள்தான் சிவ சேனா என குறிப்பிட்ட ஏக்நாத் ஷிண்டே, பால் தாக்கரே வழியில் ஹிந்துத்துவ கொள்கையை பின்பற்ற உள்ளதாகவும், கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார்.
குவஹாத்தியில் உள்ள சிவ சேனா எம்எல்ஏக்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள ஏக்நாத் ஷிண்டே, அனைவரும் இங்கு மகிழ்ச்சியாக எங்களுடன் இருக்கிறார்கள் என்றார்.
குவஹாத்தியில் உள்ள எம்எல்ஏக்களில் பலர் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறுபவர்கள், அவர்கள் யார் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஷிண்டே வலியுறுத்தினார்.
தங்கள் அணியின் செய்தித் தொடர்பாளராக தீபக் கேசர்கர் செயல்படுவார் என்று குறிப்பிட்ட ஏக்நாத் ஷிண்டே, தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவர் தெரிவிப்பார் என்றார்.
இதனிடையே, மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூட்டி உள்ளார். அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார். முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சர் அஜித் பவாரும் காணோளி காட்சி வாயிலாக பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மகாராஷ்டிர அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்காக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ், டெல்லி விரைந்துள்ளார்.
ஆளும் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், அவர்களின் அடத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள காத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுதிர் மூன்கான்டிவார் தெரிவித்துள்ளார்.











