அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்குக் காரணம் பாஜகதான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆளுநர் எதைப் பேசினாலும் அதைப் பிரச்சினை ஆகிறது என்று ராஜா சொல்கிறார் என்றும், திராவிடத்தைப் பற்றி ஆளுநருக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் தன்னுடைய பணியைச் செய்ய வேண்டும் அரசியல் பேசக்கூடாது என்பது தான் மரபு எனக் கூறினார். மேலும், ஆளுநர் அரசியல் பேசும் போது தான் இந்த பிரச்சனைகள் வருவதாகக் கூறிய அவர், ராஜா ஆளுநருக்கு ஆலோசனை சொல்லலாம் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை எனத் தெரிவித்தார்.
அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்குக் காரணம் பாஜகவைத் தவிர வேறு யாருமில்லை என்றும், பாஜக தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இயக்கி வருவதாகத் தெரிவித்த அவர், ஓபிஎஸ் ஒரு புறமும், இபிஎஸ் ஒரு புறமும் இயங்கி வருகிறார்கள், எடப்பாடி பழனிசாமி இப்பொழுதாவது உண்மையைப் பேச கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.








