ஜவஹர்லால் நேருவைப் பற்றி பேச பாஜகவினருக்கு எந்த தகுதியும் கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வங்கதேச பொன்விழா மற்றும் காங்கிரஸ் கட்சி தொடக்கவிழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் ஜவஹர்லால் நேருவும் காங்கிரஸ் கட்சியும்தான் என பெருமிதம் தெரிவித்தார்.
நேருவின் புகழை மறைக்க பாஜகவினர் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டிய கே.எஸ்.அழகிரி அவரைப் பற்றி பேச பாஜகவினருக்கு தகுதி கிடையாது என்று தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி தன் செயல் மூலம் நாட்டை சிறுமை படுத்த நினைக்கின்றார் எனவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது செயலால் சிறந்து விளங்குகிறார் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர் கோபன்னா, பொன் கிருஷ்னமுர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உ பலராமன், சென்னை மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.








