பாஜக நிர்வாகி கொலை விவகாரம் – பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஏப்ரல் 27 ஆம் தேதி பாஜக பட்டியலின அணியின் மாநில பொறுப்பாளர் சங்கர், மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை…

பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் ஏப்ரல் 27 ஆம் தேதி பாஜக பட்டியலின அணியின் மாநில பொறுப்பாளர் சங்கர், மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பாஜக பட்டியலின அணி சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் நடைபெறும் படுகொலை சம்பவங்களை கண்டித்தும், பாஜக நிர்வாகியை கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் மாவட்ட தலைவர் வசந்த்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் பாஜக பட்டியலின நிர்வாகிகளை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பாஜக பக்கம் பட்டியலின மக்கள் அதிக அளவில் இணைந்து வருகின்றனர்.

இன்று போலியாக சமூக நீதி என கட்சிகள் பேசி வருகின்றனர். அவர்களின் வேஷம் கலைந்து, பட்டியலின மக்களை மேம்படுத்தும் கட்சி பாஜக என்பதை உணர்ந்து பலர் இணைந்து வருகின்றார்கள். இதனால் குறிவைத்து பட்டியலின நிர்வாகிகளின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்தால் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.