தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே பூசல் நிலவி வருவதாக கூறப்பட்டது. அஜித்பவார் பாஜகவில் இணையவுள்ளதாகவும் வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, இந்த தகவலை அஜித்பவார் மறுத்தபோதும் கடந்த சில காலமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நிலவி வந்தது. அக்கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் அஜித்பவார் பக்கம் திரும்பியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக சரத்பவார் அறிவித்திருப்பது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் அரசியலில் இருந்து விலகவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் இந்த முடிவை அறிவித்தபோது கட்சித் தொண்டர்கள் அதனை ஏற்க மறுத்து அவரே தலைவராக தொடர வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் சென்டருக்கு முன்பாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், தொடர்ந்து கட்சியின் தலைவராக தொடர வேண்டும் எனவும், சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல் மகாராஷ்டிரா மாநிலம், தானேயில் NCP தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சரத் பவார் தனது ராஜினாமாவை திரும்பப் பெறும் வரை உண்ணாவிரதத்தை கைவிட மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள NCP தொழிலாளி ஒருவர் கலக்கமடைந்து, அழுது, சரத் பவார் கட்சியில் வெளியேற வேண்டாம் என்று வலியுறுத்தினார். அப்போது அந்த நபருக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள், தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து அவருக்கு ஆறுதல் கூறினர்.
https://twitter.com/RizwanIrfanSha3/status/1653324670278545409?s=20
- பி.ஜேம்ஸ் லிசா









