எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஏராளமான இளைஞர்கள் மதிமுகவில் உறுப்பினர்களாக இணைந்து வருகிறார்கள். மதிமுகவில் அடுத்த மூன்று மாத காலங்களுக்கு அமைப்பு தேர்தல் நடைபெறும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. மதிமுக என்ற இயக்கம் புதிய பொலிவையும் வலிமையையும் பெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாமனிதன் என்ற ஆவணப்படத்தை துரை வைகோ தயாரித்திருப்பது எனக்கே தெரியாது. முதலமைச்சரே பாராட்டி மாமனிதன் ஆவணப் படத்தை துவக்கி வைத்த பின், 46 இடங்களில் மாமனிதன் திரையிடப்பட்டுள்ளது. மதிமுக அமைதியாக இல்லை. வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்த இருக்கிறோம். மதிமுகவை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி வேகமாக செயல்படுத்தும் வகையில் சென்று கொண்டிருக்கிறோம்.
சமூகநீதி, மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஒவ்வொரு பிரச்னையாக நாட்டில் நடைபெற்று வருகிறது. 10% பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதிக்கு புதைகுழி அமைக்கின்ற வேலையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள். பாஜகவினர் ஒவ்வொரு அஜெண்டாக்களாக நிறைவேற்றி வருகிறார்கள். பாஜக வளர்ச்சிக்கு ஏடுகளும் ஊடகங்களும் தான் பிரம்மாண்டமான வெளிச்சத்தை கொடுக்கிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் முடிவில் பாஜக இறங்கி இருக்கிறார்கள். தமிழ்நாடு ஆளுநர் திருக்குறளையும் புறநானூறையும் பேசுவதன் மூலம் இங்கு யாரையும் ஏமாற்றிவிட முடியாது.
பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான அரசாக திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என தெரியவில்லை. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் அளவிற்கு எனக்கு சக்தி இல்லை.
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ராகுல் காந்திக்கு மக்களின் தொடர்பு, செல்வாக்கு, ஆதரவு அதிகமாக வேண்டும். அதன்பின் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்கலாம். அது ராகுலின் நோக்கமாக கூட இருக்கலாம். தமிழகத்தில் பாஜக வளர அதிமுக தான் காரணம் என சொல்ல முடியாது. என்னுடைய பொது வாழ்க்கை மிகவும் கரடு முரடான பாதை. ஏமாற்றங்களும் தோல்விகளும் சிறைச்சாலை வாழ்க்கையுமாக 52 ஆண்டு பொது வாழ்க்கை இருக்கிறது” என்று தெரிவித்தார்.