நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்த குழுவை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது மாநில சுயாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான E.R. ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது. தமிழக மக்களின் பல்வேறு தரப்பட்ட கருத்துக்களை இக்குழு ஆராய்ந்து தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அக்குழுவின் தலைவர் கூறியிருந்தார். ஆனால் தமிழக பாஜக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய குழு அமைத்து தமிழ் நாடு அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென்று வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.
ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மாநில அரசு ஆராய்வது தமிழ்நாடு அரசின் உரிமை. அதை எதிர்த்து தமிழக பாஜக வழக்கு தொடுப்பது மாநில சுயாட்சிக்கு விடுக்கப்படும் சவாலாக பார்க்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தினுடைய முதலமைச்சராக இருந்தபோது மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்தவர்தான். தமிழ்நாடு அரசு எந்த விவகாரத்தை ஆராய குழு அமைத்தாலும் தமிழக பாஜக எதிர்க்குமா?. ஆட்சி பீடத்திலிருந்து மக்களால் இறக்கப்பட்ட அதிமுக அரசு போல திமுக அரசு, பாரதிய ஜனதா கட்சியினுடைய பேச்சை கேட்டு நடக்கும் என்று இவர்கள் எதிர்பார்த்தால் அது பகல் கனவாக போகும்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற பாஜக தலைவர்கள் தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு மக்களையும், தமிழ் மொழியையும் மதிக்க வேண்டும். டெல்லியிலே ஆட்சி நடத்துகிறோம் என்பதற்காக ஒன்றிய அரசை கொண்டு மாநில அரசை கட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்தால் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்புதான் வலுக்கும். இதிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீட் தேர்வு தாக்கத்தை ஆராய்வதற்கு போடப்பட்ட குழு மற்றும் தமிழக அரசினுடைய செயல்பாடுகளை பார்த்து நீட் தேர்வு விஷயத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு பயம் வந்திருப்பதை உணர முடிகிறது. மக்கள் எதிர்ப்பு இருக்கின்ற ஒரு கொள்கை முடிவுக்கு ஜனநாயக ரீதியாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை போட்டு ஆய்வு செய்ய வேண்டுமென்று பரந்த மனப்பான்மையோடு முடிவு எடுத்த தமிழக அரசின் நடவடிக்கைகள் மீது என்ன தவறை கண்டார்கள்.
மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால் மாநில அரசின் முடிவுகளை தமிழக பாஜக எதிர்க்கிறதா?. தமிழக அரசு குழு அமைத்து ஆராய்வதை கூட தமிழக பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையா?. ஒன்றிய அரசு தமிழக பாஜகவை வைத்து மாநில சுயாட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை நிலைநிறுத்த பார்க்கிறதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது” என சட்டன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன் அவருடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.







