நாடாளுமன்ற கூட்டத்தை வரும் ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.
17வது நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரின் நடவடிக்கைகள் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் , மழை கால கூட்டத்தொடர் இரண்டும் முன்கூட்டியே முடிக்கப்பட்டன. கடந்த ஆண்டு குளிர் காலக் கூட்டத்தொடர் நடத்தப்படவே இல்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29ம் தேதி குடியரசு தலைவர் உரையிடன் தொடங்கியது. பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் பிப்ரவரி 15ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற்றது. பின்னர் , பட்ஜெட் மீதான விவாதம் கடந்த மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மழைகாலக் கூட்டத்தொடரை வரும் ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடத்துவது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நிறைவேற்றபடும் என்று தெரிகிறது. இதனிடையே மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்களான 540 பேரில் 403 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அதே போல மாநிலங்களவையில் 232 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நாடாளுமன்றம் கூடுவதற்குள் மேலும் பலர் தடுப்பூசி போடுவார்கள் என்று கூறப்படுகிறது.