மூத்த தமிழறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராஜனின் வாழ்க்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். கடந்த சில மாதங்களாகவே அவ்வை நடராஜன் நீரிழிவு நோயால் அவதியடைந்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமடையவே, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 85.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தமிழறிஞர் ஒளவை துரைசாமி- லோகாம்பாள் ஆகியோருக்கு மகனாக 1936-ம் ஆண்டு பிறந்தவர் அவ்வை நடராஜன். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் ஆய்வுகள் மூலம் முனைவர் பட்டம் பெற்றார்.
மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை சரபோஜி அரசு கல்லூரிகளில் விரிவுரையாளராக பணி புரிந்தார். பின்னர் டெல்லியில் அகில இந்திய வானொலி நிலைய செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் பணியாற்றியுள்ளார்.
அரசு பணி
1975-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநராக பணியாற்றினார். 1984-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாமல் அரசு துறை செயலராக முதன் முதலில் நியமிக்கப்பட்டவர் அவ்வை நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
துணைவேந்தர்
துணைவேந்தர் 1992-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார் 2014-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். 2015-ம் ஆண்டு முதல் சென்னை பாரத் பல்கலைக் கழகத்தின் வேந்தராக பதவி வகித்தார். இவர் ‘பத்மஸ்ரீ, கலைமாமணி’ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
மறைவு
சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த அவ்வை நடராஜன், ஏற்கெனவே கடந்த 2010ம் ஆண்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததால், மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று (நவ.22) மாலை 3:00 மணிக்கு, மயிலாப்பூர் மயானத்தில், இறுதி சடங்குகள் நடக்க உள்ளன. இவரது மகன் கண்ணன், ஆஸ்திரேலியாவில் டாக்டராக உள்ளார். மற்றொரு மகன் அருள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக உள்ளார்.









