மூத்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவு; ஆளுநர், முதலமைச்சர் இரங்கல்

தமிழறிஞர் அவ்வை நடராஜனின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால்…

தமிழறிஞர் அவ்வை நடராஜனின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாகவே அவ்வை நடராஜன் நீரிழிவு நோயால் அவதியடைந்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமடையவே, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

அவ்வை நடராஜன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் அறிஞரும் , கல்வியாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அவ்வை நடராஜனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அவரது ஆன்மா சாந்தியடையவும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணவர்களையும் நம்மிடம் விட்டுச்சென்றுள்ள அவ்வை நடராஜனின் மறைவு, தமிழுக்கு பேரிழப்பு என அவர் கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், அவ்வை நடராஜன் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைவதாகவும், அவரின் மறைவு தமிழுக்கும், தமிழகத்திற்கும் பெரிய இழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், அகிலம் தழுவி வீசிய தமிழ்த்தென்றல், தன் வீச்சையும் மூச்சையும் நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். பேசுதமிழ் உள்ளவரை, அவ்வை நடராஜனின் பெருமை வாழும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.