சென்னை மதுரவாயல் தாம்பரம் பைபாஸ் சாலையில் ஆட்டோ மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்ட 12 பேரை போரூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 15 பேரை தேடி வருகின்றனர்.
பந்தயத்தில் வெற்றி பெற்றால் குறிப்பிட்ட தொகை பரிசு, புகழ் மற்றும் கெத்துக்காகவும் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக தனியாக வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் ரேஸ் குறித்த தகவல்கள், போட்டியிடுபவர்கள் விவரம், போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து தெரிவிக்கப்படும்.
மதுரவாயல் – தாம்பரம் பைபாஸ் சாலையில் அடிக்கடி ஆட்டோ மற்றும் பைக் ரேஸ் நடந்து வந்தன. இதில் 2019 நவம்பர் மாதம் மதுரவாயலில் நடந்த ரேஸில், ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ மெக்கானிக் பிரபாகரன் என்பவர் உயிரிழந்தார்.
அதன் பிறகு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ஆட்டோ ரேஸ் நடத்த முடியாமல் இருந்தது. தற்போது வாகன போக்குவரத்துகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கடந்த 4-ம் தேதி அதிகாலை தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் சட்டவிரோதமாக ஆட்டோ ரேஸ் நடத்தப்பட்டது. இதில் 10 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட பைக்குகள் பங்கேற்றன. ஆட்டோக்கள் மற்றும் பைக்குகள் சீறி பாயும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இது குறித்து போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ரேஸில் ஈடுபட்டதாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 15 பேரை தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இதுவரை 3 ஆட்டோக்கள், 3 பைக்குகள், 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.







