பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஜாமீன் வழங்க, கிராமத்து பெண்களின் துணிகளை துவைக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு, வழக்குகளை விசாரிக்க பாட்னா உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர், லலன் குமார் சஃபி (20). சலவைத் தொழிலாளரான இவர், கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தனக்கு ஜாமீன் கோரி, அவர் ஜஞ்சார்புர் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் அந்த வாலிபர் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நிதிபதி அவினாஷ் குமார் அவருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கினார்.
அதாவது, குமார் வசிக்கும் கிராமத்தில் உள்ள அனைத்துப் பெண்களின் துணிகளையும் இலவசமாக ஆறு மாதத்துக்கு சலவை செய்ய வேண்டும். பின்னர் அதை அயர்ன் செய்து ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதே போன்று சில வழக்குகளில் வித்தியாசமான முறையில் அவர் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒரு வழக்கில், ஜாமீன் அளித்த இந்த நீதிபதி , அந்த நபா் தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அந்த நீதிபதி வழக்குகளை விசாரிக்க பாட்னா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை, அவர் எந்த வழக்கையும் விசாரிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.







