லாலு பிரசாத் யாதவுக்கு சிறந்த சிகிச்சை தேவைப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டர். சிறுநீரகம் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் அவருக்கு 2017 டிசம்பர் மாதம் முதல் ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் லாலுவுக்கு நேற்று முன் தினம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, மூத்த மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. லாலுவை பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, தேஜஸ்வி உள்ளிட்ட குடும்பத்தினர் நேற்று மாலை நேரில் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, லாலுவுக்கு 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டதோடு இதய நோய், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய சிறுநீரக செயல்பாடுகள் குறைந்துகொண்டே வருகிறது. நெஞ்சு வலி இருப்பதாக கூறுவதால் கொரோனா இருக்குமோ என்ற கவலையும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
லாலுவுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்த தேஜஸ்வி, இதுதொடர்பாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்துப் பேச இருக்கிறார்.
எனினும், எய்ம்ஸில் இருந்து சிறப்பு மருத்துவர்களை அழைத்திருப்பதாக மருத்துவமனை இயக்குனர் காமேஸ்வர் பிரசாத் கூறியுள்ளார். மேலும், லாலு உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் முடிவு நார்மல் என்றே உள்ளது. ஆன்டிஜென் மற்றும் ஆர்சி பிசிஆர் சோதனைகளின் முடிவில் நெகட்டிவ் என வந்துள்ளதாகத் தெரிவித்தார்.