ராவுல் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்க சிஐஏ சதி !

கியூபா புரட்சியாளர்களில் முக்கியமானவர், அதிபர் மற்றும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்த ராவுல் காஸ்ட்ரோவையும் கொல்ல 1960-ம் ஆண்டு அமெரிக்கா உளவுத் துறையான சிஐஏ சதித் திட்டம் தீட்டிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.…

கியூபா புரட்சியாளர்களில் முக்கியமானவர், அதிபர் மற்றும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்த ராவுல் காஸ்ட்ரோவையும் கொல்ல 1960-ம் ஆண்டு அமெரிக்கா உளவுத் துறையான சிஐஏ சதித் திட்டம் தீட்டிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ராவுல் காஸ்ட்ரோ கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பதிவில் இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்றுள்ள நிலையில் இந்த கொலை திட்டம் வெளியாகியுள்ளது.

இது குறித்து வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தேசிய பாதுகாப்பு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதில் 1960-ம் ஆண்டு அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பு ராவுலைக் கொல்ல திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. ரவுலைக் கொல்ல 10ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் தருவதாக விமான ஓட்டுநர் ஜோஸ் ரவுல் மார்டினெஸ் என்பவரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பராகு-ஹவானா செல்லும் சாலையில் ஒரு விபத்து போல தோற்றம் அளிக்கும்படி ராவுலை கொல்லவும் சிஐஏ சதித்திட்டம் தீட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. ராவுலை கொல்லும்போது அந்த பைல்ட் ஒருவேளை உயிரிழக்க நேரிட்டால் அவரது குழந்தைகளின் பல்கலைக்கழக படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகவும் சிஐஏ சார்பில் உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி ராவுலை கொல்லும் பயணத்துக்கு ஜோ ரவுல் தயாரானபோது, சிஐஏ சார்பில் தொடர்பு கொண்ட அதிகாரிகள், ராவுல் காஸ்டோரவை கொல்லும் திட்டத்தைக் கைவிடும் படி கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கியூபாவின் அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்க சிஐஏ 600 முறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ராவுல் காஸ்ட்ரோவையும் கொல்ல அமெரிக்கா சதி திட்டம் தீட்டியிருப்பது சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.