இந்தியாவில் நடந்த இந்த செஸ் ஒலிம்பியாட் தான் வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் ஒலிம்பியாட் என செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் கபூர், செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக முடிந்தது. இன்றைய தேதி வரை இது வரை நடந்த ஒலிம்பியாட் போட்டிகளில் இது தான் சிறந்த ஒலிம்பியாட் ஆக இருக்கும் எனக் கூறினார்.
மேலும், வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இது தான் எனக் கூறிய அவர், அரசு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. இந்தியாவில் நடந்த முதல் ஒலிம்பியாட் போட்டி நாம் ஒவ்வொருவரும் பெருமைப் பட வேண்டிய ஒன்று எனத் தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியைக் காண மக்கள் காட்டிய ஆர்வம் வியப்பாக இருந்தது எனத் தெரிவித்த அவர், மக்கள் ஆர்வமாகப் போட்டியைக் கண்டு களித்தனர் என நெகிழ்ச்சிப்பட தெரிவித்தார். மேலும், இந்தியப் பெண்கள் அணி வெண்கலம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த அவர், தங்கம் வெல்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்தோம் எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘நிதிஷ்குமார் அதிரடி: நம்பிக்கை துரோகம்- பாஜக, நல்ல தொடக்கம்- சமாஜ்வாதி’
தொடக்கம் முதலே நாம் தான் முன்னிலையிலிருந்தோம். தங்கம் பதக்கம் வெல்லாதது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பரவா இல்லை ஆண்கள், பெண்கள் என இரு அணியும் பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு செஸ் வீரர் உருவாகுவார் என நம்புவதாகத் தெரிவித்த அவர், செஸ் போட்டிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி எனக் கூறினார்.








