பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி அரசு நாளை மதியம் 2 மணிக்கு பதவியேற்கிறது. துணை முதலமைச்சராக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்கிறார். நிதிஷ்குமார் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக பாஜக விமர்சித்துள்ள நிலையில், இது ஒரு நல்ல தொடக்கம் என சமாஜ்வாதி பாராட்டியுள்ளது.
பீகாரில் கடந்த 2020ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தது. 74 இடங்களில் வென்றிருந்த பாஜக 43 இடங்களையே வென்றிருந்த ஐக்கிய ஜனதா தளத்திற்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்த போதிலும், இரு கட்சிகளுக்கும் இடையே மனக் கசப்பு தொடர்ந்து வந்தது.
பாஐகவினர் தங்கள் கட்சியையும், முதலமைச்சர் நிதிஷ்குமாரையும் மதிப்பதில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ராஷ்டிரியஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி, நிதிஷ்குமார் தலைமையில் புதிய கூட்டணி அரசை அமைக்க ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து மீண்டும் ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார். ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து நாளை பீகாரின் முதலமைச்சராக 8வது முறையாக பதவியேற்கிறார் நிதிஷ்குமார், துணை முதலமைச்சராக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவி யேற்க உள்ளார்.
இதற்கிடையே ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைக்க உள்ளதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. நிதிஷ்குமார் பீகார் மக்களுக்கும் பாஜகவிற்கும் துரோகம் இழைத்துவிட்டதாக பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் குற்றம்சாட்டினார். 2020ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையத்தான் மக்கள் வாக்களித்தார்கள், ஆனால் மக்களின் விருப்பத்தை மீறி நிதிஷ்குமார் தற்போது செயல்பட்டுள்ளதாகவும் சஞ்சய் ஜெஸ்வால் கூறினார்.
அதேநேரம் நிதிஷ்குமாரின் முடிவுக்கு சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இது குறித்து உத்தரபிரதேசத்தில் கருத்து தெரிவித்த சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜகவிற்கு எதிராக அரசியல் கட்சிகளும் மக்களும் அணி திரள்வதற்கு இது ஒரு நல்ல தொடக்கம் என்றார்.







