‘வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார்’ – புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 2022-23 ஆம் ஆண்டிற்கான முழுமையான…

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 2022-23 ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், புதுச்சேரி மாநில திட்டக்குழு இறுதி செய்த பட்ஜெட்டிற்கான கோப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்காமலிருந்தது. இதன் காரணமாக பட்ஜெட் தாக்கல் செய்யத் திட்டமிட்டிருந்த முதலமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதனால் அவசரமாக முதலமைச்சர் ரங்கசாமி டெல்லி பயணம் மேற்கொண்டார்.

அண்மைச் செய்தி: ‘‘வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் ஒலிம்பியாட் ’ – செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர்’

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி இணைந்து அக்கட்சியின் நிறுவனர் ரங்கசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக நேற்று முன்தினம் அவர் டெல்லி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, உள்படப் பலரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி ரங்கசாமி, பிரதமர், மத்திய நிதி அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து புதுச்சேரி மாநில வளர்ச்சிக்குப் பேசியதாகவும், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகப் பிரதமர் கூறியதாகவும் கூறினார். மேலும், புதுச்சேரி மாநிலத்துக்குத் தேவையான நிதியைத் தருவதாக மத்திய நிதி அமைச்சரும் உறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.