கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தனது காரையே நடமாடும் க்ளினிக் ஆக மாற்றி, மருத்துவர் ஒருவர் உதவி செய்து வருகிறார்..தன்னலம் பாராத சேவையால் தனித்துவம் காட்டியிருக்கிறார், பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் சுனில் குமார்.
கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தில் உள்ள நமதாபுரத்தைச் சேர்ந்த சுனில் குமார், பெங்களூருவில் வசித்து வருகிறார். அங்குள்ள கொரோனா மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுனில் குமார், சுமார் 250க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு, வீடு தேடி சென்று மருத்துவ சிகிச்சை செய்து உதவியுள்ளது, தான் பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.
இதற்காக தனது தினசரி வாழ்க்கையில், சுமார் 20 மணி நேரத்தை செலவிட்டு வரும் மருத்துவர் சுனில் குமார், மருத்துவமனையில் இரவு ஷிஃப்ட் முடிந்த கையோடு, காலை 10 மணி முதல் நகரத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளாக காரிலேயே பயணித்து, மருத்துவ உதவிகளை செய்து வருகிறார்.
கொரோனா பெருந்தொற்றுடன் மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்படும் முதியோர்கள், நோயாளிகள், சிறுவர் சிறுமியர் என அனைவருக்கும் இவரது சேவையே ஆறுதலாய் அமைந்திருக்கிறது.
சிறு வயதில் மருத்துவ வசதி எளிதில் கிடைக்காத தன் கிராம மக்களின் நிலையை எண்ணி, அதற்காகவே மருத்துவம் பயின்ற சுனில் குமார், அவசர தேவையை கருத்தில் கொண்டே, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கிளினிக் சேவையை தொடங்கியிருக்கிறார். அப்படி தொடங்கிய சேவை ஆலம் விழுதாய் மக்களிடையே பரவ, மாநில அரசு முதல் மத்திய அரசு வரை பல்வேறு விருதுகளும் குவிந்துள்ளன.
கடந்த 11 ஆண்டுகளில், சுமார் ஒரு லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கும் மருத்துவ சுனில் குமார், தற்போதைய காலக்கட்டத்தில், தன் சேவையால் ஏழை மக்களின் இதயத்தில் இடம் பிடித்துவிட்டார். காரில் எப்போதும், மருந்துகள், குளுக்கோமீட்டர், ஆக்ஸிஜன் டேங்க், பிபி மானிட்டர், ஈ.சி.ஜி இயந்திரம் என மருத்துவ உபகரணங்களோடு பயணிக்கும் இவரது வருகைக்காகவே நோயாளிகள் பலர் காத்திருப்பது, மருத்துவர்களில் மகத்துவர் சுனில் குமார் என்பதை, அனைவரும் அறிந்து கொள்ள உதவுகிறது
தன்னலம் பாராத மருத்துவர் சுனில் குமார் சேவைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன….







